Thursday, April 17, 2014

நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்.

 நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்பாரத நாடு... பழம்பெரும் நாடு...!நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்...!

எங்கேயா எப்பொழுதோ கேட்டது போல் தோன்றுகின்றதா...!நம் பண்டை பாரதத்தின் அருமை பெருமைகளை போற்றும் நாம், நம் முனனோர்களின் வழிகாட்டுதல் முறைப்படி நாம் செல்கிறோமா?பல நாடுகளில் மனிதன் காடு மலை குகைகளில் அலைந்து திரிந்து நாடோடிகளாக வாழ்ந்த காலங்களிலேயே, நம் ம...ுன்னோர்கள், வாழ்க்கை நெறி முறைத் தத்துவங்களையும் நல்லவற்றையும், நன்றன்றதையும் உலகிற்க்கும் கற்றுக்கொடுத்துச் சென்றனர். பல நாட்டு மக்கள், நம் முன்னோர்களின் அளவிலா அறிவாற்றலை வியந்து பாராட்டி, நம் நாட்டிற்கு வந்து கற்றறிந்து, தங்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். இன்றளவும் நம் வாழ்விற்கு வழிகாட்டும் நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள், நம்மை மட்டுமின்றி, உலகத்தனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. இப்படியும் நிகழ்ச்சிகள் நம் வாழ்வில் நிகழுமாவென நம்மால் கற்பனையிலும் நினத்துககூடப் பார்க்க முடியாத பல சிக்கலான முடிச்சுகள் நிறைந்த காதைகளான இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், இன்றும் உலகளவில் பலராலும் பல பல்கலைக்கழகங்களிலாலும் ஆராயப்படுவதே இதன் சான்று.இவ்விருக் காப்பியங்களை கதைகளாக மட்டும் பார்க்காமல் அதன் கருத்தினை உள்வாங்கிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் வாழ்க்கை வழிக் காட்டுதலை நாம் அறிய முடியும். பல யுகங்களாக சிறிதும் பிழையின்றி முறண்பாடுகளின்றி செவி வழிச்செல்வமாகவும், ஓலைச் சுவடிகள் மூலமாகவும் காப்பாற்றப்பட்டு வரும் நம்முடைய பொக்கிஷங்கள் பலவற்றை நாம் பலர் போற்றிப் புகழ்ந்தாலும், அதன் வழி நடக்கிறோமாவென்பது மிகப் பெரியக் கேள்விக்குறி.இன்றையக் காலகட்டத்தில் பல வழிகளில் நாம் பொருளீட்டினாலும் பெரும்பான்மையானவர்கள் நியாயமான முறையில் தங்கள் தொழிலை செய்யவே விரும்புகின்றனர். மிகச் சிலர், துரீதமாக இலக்கையடைய விரும்பி எதிர்மறை விதி வழிகளை கையாளுகின்றனர். விளைவு அவர்தம் பாதையில் குறுக்கிடுவோர், ஒன்று அவரைப்போல் தங்கள் வழியை மாற்றிக்கொள்ளப் பழக்கப்படுத்தப்படுகின்றனர் அல்லது அவரது வழியிலிருந்தே விலக்கப்படுகின்றனர். மறுத்தால் வாழ்விலிருந்தே...!நம் நாட்டிலுள்ள கோடானு கோடி மக்கள் நேர் வழியில் நகர்ந்தாலும், உள்ளுக்குள், சிலச் சமயங்களில் சில மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு, தங்களையறியாமலே புற வழிகளில் செல்கின்றனர். உதாரணமாக, சாப்பாட்டு விடுதி சர்வருக்கு வெகுமதி, கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவருக்கு வெகுமதி, ஆட்டோக்களில் மீட்டருக்கு மேல் வெகுமதி, கோயில்களில் அர்சகருக்குத் தட்டில் வெகுமதி, எனப் பலவிடங்களில், நம்மையறியாமலேயே நாம் வெகுமதி கொடுத்துக் கொடுத்து வாங்குபவர்களை பழக்கி வெகுமதிக்கு அடிமைகளாக்கிவிட்டோம். இப்பொழுது ஓரு சிலர் அதை தர மறுக்கும் பொழுது, அடிமைகளானவர்கள், தாங்கள் செய்யவேண்டியக் கடமைக்களைக்கூடச் செய்ய மறுக்கின்றனர். முதலில் நம்மால் ஊக்கபடுத்தவே ஆரம்பமான இந்தப் பழக்கம், இப்பொழுது நம் நாட்டில் ஒரு போதை மருந்தின் அடிமைகளைப்போல் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு, கல்வி, மருத்துவம், வணிகம் பரந்து விரிந்து இன்று எல்லாத்துறைகளிலும் 'ஆலவிருக்ஷம்' போல் வேரூன்றி மிகப் பிரம்மாண்டமாய் ஒரு 'கார்னிவோரஸ் டைனோஸ'ராக உருவெடுத்து நம்மை விழுங்கக் காத்திருக்கிறது.காலத்தின் கோலமாக, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாடு தேர்தலில் ஈடுபடும் இத்தருணங்களில், உலக நாடுகள் அனைத்தும் நம்மையே உற்று நோக்குகின்றன. காரணம், நம் நாட்டின் மக்கள் தொகை. உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு நம் நாட்டில் காலூன்றக் காரணம் அதன் வியாார நோக்கம். சீனாவிற்கு அடுத்தபடியாக மக்கள் தொகை கொண்ட நாம், நம் நாட்டையும், நம் நாட்டுப் பொருள்களையும் விரும்பாமல், அயல் நாட்டுப் பொருட்களின் மேல் கொண்ட மோகம், அயல் நாட்டவரின் ஆதாயம். தரமற்றப் பொருட்ளையும், கலப்பட வித்தைகளயும் பாலப் பாடமாக நாம் கற்றதனால் வந்த விளைவே அந்நிய நாடுகளுக்கும் அதன்பொருட்களுக்களுக்கும் நம்மை அடிகளாக்கி அவர்களுக்கும் அவர்தம் பொருட்களுக்கும் "டோல் ஃப்ரி எக்ஸ்பிரஸ் வே" போட்டன.நம்முடைய அறியாமையில் விதைக்கப்பட்டு, இலஞ்சமெனும் நவீன நீர் பாசன முறைகளைக் கையாண்டு, இலவசங்களில் முளைவிட்டு, வெகுமதி எருவாக்கி, நேர்மையை களையெனயெறிந்து, ஊழல் கதிர்களாக வளர்ந்து, இன்று நாடு முழுவதும் ஊழலே அறுவடைக்குத் தயாராகவுள்ளது.நாமும் தயாராகி விட்டோம் அடுத்தப் பாரதப் பிரதமரைத் தேர்ந்தெடுக்க... நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல கண்டிப்பாக அனைத்து வேட்பாளர்களும் உறுதியளிக்கின்றனர். நிலையான ஆட்சிக்கும் உறுதி.நம் நாடு முன்னேற்றமடைய இவையிரண்டும் போதுமானாதா? நம்மில் பலர் வளர்ச்சிப்பாதையும் நிலையான உறுதியான ஆட்சியே போதுமென முடிவெடுத்துள்ளது சரியானதா? ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் அவசியம் வேண்டத்தகாதவையா? பெருகி வரும் அந்நிய தீய சக்திகளை எதிர்க்க நேர்மையான அரசினால் முடியாதா?உள்நாட்டில் பல்கிப்பெருகும் லஞ்ச லாவண்யங்களையும், முதலாளித்துவத்தையும், மிக வேகமாக அதிகரித்து வரும் ஏழைகளின் விகிதாசாரத்தையும், மிக வேகமாகக் குறைந்து வரும் உள் நாட்டு வேளாண்மையும், உற்பத்திப்பொருட்களையும் சீர்படுத்த தேவைப்படுவது நிலையான ஆட்சியா அல்லது ஊழலற்ற ஆட்சியா?நாம் அனைவரும் வேண்டுவது அமைதியான, நேர்மையான, உண்மையான, ஊழலற்ற ஆட்சியே...

நாம் வாழ விரும்புவதும் அவ்வாறே...நம் வாழ்க்கை நம்மிடமுள்ளது...

நாமனைவரும் ஒன்றுபட்டு நேர்மையாக தீர்மானித்தால்... அமைதியான வாழ்வு...!

நிலையாகத் தீர்மானித்தால்... அடிமையான வாழ்வு... !

முடிவு நம்மிடம்....!சத்தியமேவ ஜெயதே...!

ஜெய் ஹிந்த்....!

Wednesday, April 02, 2014

சி.ஐ.ஏ. ஏஜன்ட்

சி.ஐ.ஏ. ஏஜன்ட்:
===========
பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியான தேகம். மிகச் சாதாரணமான தோற்றம். மிக மிகச் சாதாரணமான உடை. அசப்பில் நம் பக்கத்து வீட்டு மனிதரைப் போல் தென்படும் அவர்தான் இன்று இந்திய தீபகற்பத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் மனிதர் அரவிந்த் கெஜிரேவால். டில்லியின் முன்னாள் முதலமைச்சர். காரக்பூர் ஐ.ஐ.டி யில் பீ.ஈ முடித்து, பின் ஐ.ஆர்.எஸ். ல் தேர்வு பெற்று, வருமான வரித்துறையில் கமிஷ்னராக பணியாற்றியவர். ஆசிய கண்டத்தின் நோபல் பரிசிற்கு இணையான பரிசான மாக்ஸேஸே விருது பெற்றவர்.

இவரைப் பற்றிப் பலஅவதூறுகளை பிஜேபி யும், காங்கிரஸம் மிக நேர்த்தியான உத்திகளைக் கையாண்டு பரப்புகின்றன. அவர் அரசியலுக்கு வருவதற்கு முன், அவரை செல்லாக் காசு என்று வர்ணித்தனர். வந்தப் பின் அவர் சி.ஐ.ஏ வின் ஏஜன்ட் என்றும், ஃபோர்டு நிறுவனத்திடம் பணம் பெற்று இந்தியாவில் அரசியலில் குழப்பம் விளைவிப்பவர் என்றும் கூறினர். பின் அதற்கு ஒரு படி மேலேப் போய் அரவிந்த் கெஜிரேவால் ஏ.கே. ஒரு பாகிஸ்தான் கைக்கூலி என்று கூறினர்.

பீ.ஜே.பி யும், காங்கிரஸம் ஏன் அவ்வாறு கூற வேண்டும். பெரும்பான்மையான மக்களும் ஒரு வேளை இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ என்று பயப்படக் காரணம் என்ன? இதன் உண்மையானப் பிண்ணனி என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடைக்காண சற்று பின்னோக்கி அதாவது Dec 1999ம் வருடம் செல்ல வேண்டும். அ.கெ. அன்று வ.வரித்துறையில் பணியாற்றிக்கொண்டு "பரிவர்தன்" என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொது வினியோகம், (ரேஷன்), மின்சாரம், வருமானவரித்துறைகளில் ஏற்படும் சிரமங்களைக் களைந்தார். பரிவர்தன் மூலம் பொது வினியோகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலை நாட்டிற்கு அம்பலப்படுத்தினார். பின்னர் ஆர்.டீ.ஐ மூலம் பல அரசுத்துறைகளின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். ஆர்.டீ.ஐ மூலம் நம் நாட்டின் ஊழல்களை ஒழிக்க முடியாது என உணர்ந்து 'ஜன் லோக்பால் பில்' வேண்டுமென்று அன்னா அசாரே வுடன் சேர்ந்து காங்கிரஸ் அரசிடம் முறையிட்டு பல அவமானங்களையும் துன்பங்களையும் சந்தித்தார். கபில் சிபில், ப.சிதம்பரம் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அ.கெ மற்றும் குழுவினரை விவாதத்திற்கு அழைத்து அவமானப்படுத்தி வெளியேற்றினர். இந்தியாவிற்கு ஜன் லோக் பால் பில் தேவையில்லை என்று அவர்கள் அ.கெ குழுவினரைக் கிண்டலடித்தனர். முடிந்தால் அரசியலுக்கு வந்து,ஓட்டுகளை பெற்று ஜன் லோக் பில் ஐ நிறைவேற்றுங்கள் என்று கொக்கரித்தனர். நாட்டு மக்கள் மவுனமாக எல்லாவற்றையும்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கெட்டதிலும் ஒரு நல்லது போல, காங்கிரஸ் சொன்னது போல அ.கெ. "ஆம் ஆத்மி" கட்சி தொடங்கி குறுகியக்காலத்தில் டில்லியில் நடைபெற்றச் சட்டசபைத் தேர்தலில் 28 சீட்டுகள் பெற்றார். கிண்டலடித்த காங்கிரஸ் 08 சீட்டுகளைப் பெற்றன. இதுவரை மவுனம் காத்த பிஜேபி 31 சீட்டுகளைப்பெற்றும் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தாமாக முன் வந்து எழுத்து மூலம் தெரிவித்தது. ஆம் ஆத்மி கட்சி, பிறகும் காங்கிரஸை நம்பாமல் தங்கள் 18 நிபந்தனைகளை தெரிவித்த, காங்கிரஸ் ஒப்புக்கொண்டதனால் டில்லியில் ஆட்சியமைத்தது. இதுவரை சாதாரணமாகத் தெரிந்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பிஜேபி.க்கு சிம்ம சொப்பனமாயிற்று. ஆட்சிக்கு வந்து ஐந்தே நாட்களில், தனியார் மின்சார நிறுவனங்களான ரிலயன்ஸ்,டாடா ஆகிய பண முதலைகளைத் தணிக்கைக்குட்ப்படுத்த வேண்டுமென்ற ஆணையை பிரபித்தது. ரிலயன்ஸ்,டாடா நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற காங்கிரஸ் மற்றும் பிஜேபி செய்வதறியாது திகைத்தனர். ஆனால், ஆம் ஆத்மி கட்சியோ மக்களுக்கு பல நன்மைகளை செய்ய முனைந்தனர். குடிநீர் இணைப்பு உள்ளவர்க்கு இலவச் குடிநீர், மின்சார மான்யம், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு, போதைப்பொருள் மற்றும் விபசார ஒழிப்பு என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டத் தருணங்களில், காங்கிரஸ் மற்றும் பிஜேபி, மீடியாக்களின் துணைக்கொண்டு, ஆம் ஆத்மி கட்சியின் மக்கள்நலத்திட்டங்களை விமரிசித்தனர். எப்பாடுபட்டாவது ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற சதித் திட்டம் தீட்டினர். அப்பொழுது தான் ஆம் ஆத்மி கட்சி, ஜன் லோக் பால் மசோதாவை சட்டசபையில் அறிமுகப்படுத்தியது. ஜன் லோக்பால் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டால் எங்கே தம் கட்சியில் பாதி உறுபினர்கள் சிறைச் செல்ல நேரிடுமா என்று பயந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளும் ஒருங்கிணைந்து, சில உப்பு சப்பில்லாத காரணங்களைக் காட்டி, மக்களுக்கான ஒரு நல்ல மசோதாவைத் தோற்க்கடித்தனர். இல்லையில்லை... ஜனநாயகத்தைத் தோற்க்கடித்தனர் என்றேக் கூற வேண்டும். காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூறியது போல் ஜன் லோக்பால் மசோதா ஒன்றுக்கும் உதவாத மசோதாவெனில், இரண்டு கட்சிகளும் அதை நிறைவேற்றியிருக்கலேமே. அவர்களே மசோதாவைத் தோற்க்கச் செய்து பின் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி செய்ய இயலாமல் ஓடிவிட்டது எனக் கூறுவது விந்தையிலும் விந்தை.

பின்னர் நாடளுமன்றத் தேர்தல் களத்தில் இறங்கியப்பின், ஆத்மி கட்சி ஆட்சியின் புகழ் நாடு முழுவதும் தாமாகப் பரவுவதைக் காணப் பொறாத காங்கிரஸ் மற்றும் பிஜேபி பரப்பிய வதந்திகள் ஏராளம். முக்கியமானக் குற்றச்சாட்டு அரவிந்த் கெஜிரேவால் ஒரு சிஐஏ உளவாளி. அவர் சிஐஏ விடம் பணம் பெற்றுக் கொண்டு நம் நாட்டு அரசியலில் ஒரு ஸ்திரத்தன்மை வருவதை, ஒரு வலிமையான அரசு மத்தியில் அமைவதைத் தடுக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை மேலோட்டமாகப் பார்த்தால் உண்மையோ என்றுக் கூட நினைக்கத்தோன்றும். சற்று ஆராய்ந்துப் பார்த்தால் உண்மைப் புலப்படும். அரவிந்த் கெஜிரேவால் ஒரு சிஐஏ உளவாளி என்றே வைத்துக்கொள்வோம். அவர் மத்தியில் ஒரு வலிமையான அரசு அமைவதைத் தடுக்கிறார் என்றால், அதனால் அமெரிக்க அரசுக்கு அதன் மூலம் ஏற்ப்படுவது பேரிழப்பே தவிர லாபமல்ல. ஏனெனில் அமெரிக்கா இந்தியாவில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிலும் வால்மார்ட் போன்ற பெரிய அமெரிக்க நிறுவனங்கள் டாலர்களை தண்ணீர் போல் இரைத்துள்ள இந்த நிலையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கும் அ.கெ. கட்சிக்கு அமெரிக்காவும் அதன் உளவுத்துறையான சிஐஏ வும் பணத்தைக் கொடுக்குமா இல்லை, அமெரிக்காவிற்கும் மற்ற உலக மகா கோடீஸ்வர முதலாளி வர்கத்தினர்க்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி க்கு டாலர் மழை பொழியுமா. சிறு குழந்தைகள் கூட விடை கூறிவிட்டுத் தங்கள் அன்னையின் மடியில் விளையாடி நம்மைப் பார்த்து சிரிக்கும்.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.
===================================
பல உயிர்களைக் கொன்று குவிக்கும் கும்பலில் சிக்கிய ஒருவன் மன்றாடி உயிர்ப்பிச்சை கேட்கும் பொழுது மதிக்காமல் , கொடுக்காமல் அவனிடம் இரக்கம் சிறிதும் காட்டாமல் கொன்று போடும் இனவெறி மதவெறி கொண்டவர்களாக நாம் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப் பட்டுவிட்டோம் . இதற்குக் காரணம் நம்மிடம் மீதமுள்ள நம்முடைய மூதாதையர்களின் அணுக்களின் அங்கலாய்ப்பே...
பல்வேறு மதங்களை தன்னுள் கொண்ட நம் பாரத தேசம், சாதி, மத இன வேறுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என பெருமிதம் கொள்ளும் நாளும் இனி வராதோ என ஒவ்வொரு இந்தியனும் ஏங்கித் தவிப்பதும், சக மனிதர்களை சகோதரர்களாக நினைப்பதை மறுதலிக்கும் வெற்றுடம்பு ஜடங்களாக நாம் மாறி வெகு காலமாகிவிட்டது.
இன்று நாம் ஒருவரை ஒருவர் பழிச்சொல்லால் சுட்டெரித்து, வசைபாடி, முடிந்தவரை நம் காழ்ப்புணர்ச்சியை அடுத்தவர் மீது வீசுகின்றோம். இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள், ஏன் அன்பையே போதித்த புத்தரை வழிபடுபவர்களும் மத சகிப்பு தன்மை சிறிதும் இன்றி ஒருவரை ஒருவர் தாக்கிகொள்கின்றனர். சொல்லப்போனால் எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. அன்பே சிவம். அன்பின்றி ஓர் அணுவும் அசையாது என்று படித்தும் நம்மில் பல பேர், ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் வெட்டிக்கொண்டும் மாய்கின்றனர் . அவர்கள் அனைவரும் உணர்சிகளால்த் தூண்டப்பட்டவர்கள். தூண்டுவிக்கப்பட்டவர்கள். எய்யபட்ட அம்புகள். எய்தவர் எவரோ.
இதற்குக் காரணம், நாம் மெத்தப் படித்தாலும் அல்லது படிக்காத தற்குறிகளானாலும், நாம் எளிதில் உணர்சிகளுக்கு அடிமைகளாகி விடுகிறோம். எவரேனும் நம்மை விமரிசித்தால், உடனே அவரிடமுள்ள குறைகளை கண்டுபிடித்து அதை அவருக்கு வலிக்கும் வரைக் கூறி அதன் மூலம் நம்மைத் தற்காத்துக் கொள்கிறோம்.
நம் நாட்டில் இந்துக்கள் 80.5 சதவீதம் பேர். முஸ்லிம்கள் 13.4 சதவீதம் பேர் கிருத்துவர்கள் 2.5 சதவீதம் பேர். மற்றவர்கள் 3.7 சதவீதம். இதில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் என்னதான் "பாய் பாய்" என்று பேசினாலும், உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டே வாழ்ந்து வருகின்றனர். இதற்கு பலக் காரணங்கள், பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு, நிகழும் தொடர் குண்டு வெடிப்புகள், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்கள் ஊடுருவல் , தீவிரவாதத் தாக்குதல், இது நாள் வரை தீர்வு காணப்படாத காஷ்மீர் விவகாரம் நம் அரசியல் வாதிகளின் வோட்டு வேட்டைகள்,அமெரிக்க ராணுவ தளவாட வியாபார தந்திரங்கள் என பல்வேறுக் காரணங்களால் நம்மை கூறு போட்டு நாம் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ள வெடித்துக் கொள்ளவவும் திரி இல்லாமலே நெருப்பு வைக்கின்றன.
அவர்கள் நம்மை குண்டு வைத்துக் கொல்கிறார்களே...நாமும் அவ்வாறு செய்யலாமே என்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பதில் குண்டு வைத்தால் நாட்டில் ஒருவர் கூட நடமாட முடியாது. மேலும் தீவிரவாதிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் . நம்மில் அனைவரும் பிறக்கும் பொழுதே தீவிரவாதிகளாக பிறப்பதில்லை. தீவிரவாதிகளாக உருவாக்கப்படுகிறார்கள் . தீவிரவாதம் எல்லாவற்றிற்கும் தீர்வாகிவிடாது என்பதை நன்கு அறிந்த நாமே அவர்களைப் போல் கோபப்படுவதும், பிறர்களை தூண்டிவிடுவது போல் பேசுவதும் அதுவும் தேர்தல் நேரத்தில் பேசுவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்ப்படுத்தி பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும். அரசியல்வாதிகள் வோட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். நாமும் அவ்வாறு செய்தால் அது மிகவுல் தவறான செயலாகும். அவ்வாறு பிரிவினைவாதத்தை தூண்டுவோர் முதலில் தைரியமாக நாட்டில் இருந்து துணிச்சலாக களத்தில் இறங்கி மோதிப் பார்க்கவேண்டும். எங்கோ எந்த நாட்டிலோ இருந்துக்கொண்டு இங்கிருப்பவர்களை சீண்டிப் பார்த்து அவர்களின் நடவைக்கைகளை வேடிக்கை பார்த்தல் வன்முறையை விட வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பாரத் மாத்தா கி ஜே.
சத்தியமேவ ஜெயத்தே.

Sunday, March 02, 2014

உன்னால் முடியும் தம்பி.

உன்னால் முடியும் தம்பி.

இந்தியர்களாகிய நாம், ஏறககுறைய முன்னூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்து பழகிவிட்டதனால், அநியாயங்களை அனுசரித்துப் போக நம் டி.என்.ஏ கொஞ்சம் கொஞ்சமாக தன் நிறம் மாறி, குணம் மாறி, அதன் தன்மானம் முற்றிலுமாக மறக்கடிக்கப் பட்டது. அதன் விளைவே இன்றும் நம்மால் முடிந்த மட்டிலும் உண்மையை புறந்தள்ள அனைத்துக் கட்சிகளும் வரிந்துக் கட்டிக் கொண்டு சத்தியத்தின் மரண சாசனத்தை வரைய முற்படுகின்றன. துணைக்கு பலரும், தாங்களும் இந்த பச்சோந்திகளின் பசிக்கு உணவாகிறோம் என்று தெரிந்தும், எங்கே எதிர்த்தால் நம் சுகம் பறி போய்விடுமே என்ற சுயநல உணர்வின் காரணத்தினால், தெரிந்தே தாங்களும் படு குழியில் விழுந்து, மற்றவர்களையும் இழுக்கப் பார்கின்றனர்.சொல்லப்போனால், நமக்கு அடிமைத்தனம் மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றேத் தோன்றுகிறது. இல்லையென்றால், எழுத்தறிவு அறவே அற்ற கொலைகார பாதகர்களுக்கெல்லாம் ஓட்டுப்போட்டு நம்மை ஆள நாமே நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்போமா?ஒருவர் கொலை செய்து விட்டுக் காட்டில் ஒளிந்து கொள்கிறார். அவருக்கு மத்திய மந்திரிப் பதவி. ஒருவர் மூன்றாம் வகுப்புப் படித்து விட்டு மாட்டுத்தீவனத்தில் 900 கோடி ஊழல் செய்கிறார்.அவருக்கு இரயில்வே மந்திரிப பதவி. போதாதக் குறைக்கு அவர் ஹார்வர்டு பல்கலை கழகத்தில் மாணவர்களுக்கு சிறப்பு சொற்பொழிவாற்றி அவர்களையும் தன்னைப் போல் ஒருவராக்க பாடுபட்டவர். மேற்க் கூறப்பட்டவர்கள், ஒரு பானைச் சோற்றிற்கு பதமான இரு சோறு. மற்றபடி பானை முழுவதும் பதமே. சில சமயங்களில் இவர்களைப்போன்றோரே நம்மைப்போன்றோரை ஆளச்சரியானவர்கள் என்றுத் தோன்றுகிறது. காரணம், நமக்கும் அது வசதியே, பல விதங்களில். நாமனைவரும் கடப்பாறையை தின்று விட்டு ஜீரணிக்க சுக்குக் கஷாயம் குடிக்க முயலுகின்றோம். தவறு அவர்களிடம் இல்லை. நம்மிடமே.
தொல்லைகள் தொடரும்.....

Tuesday, January 28, 2014

மறக்கடிக்கப்பட்ட இந்திய மாமேதைகள்.

மறக்கடிக்கப்பட்ட இந்திய மாமேதைகள்.

நேற்று பொதிகை தொலைக்காட்சியில் ஓளிபரப்பான ஒரு நேர் காணல் என்னைக் கட்டிப் போட்டது. காரணம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவரின் தங்கு தடையின்றிய அருவி போன்ற விழுந்தப் பேச்சில் லயித்துப் போனேன். அவர் யார் எவர் என்ற விவரம் ஒன்றும் தெரியாமல் அவரின் வார்த்தைகள் என்னைக் கவர்ந்தன. பேட்டியின் ஊடே அவர் ஒரு தயாரிப்பாளரின் மகனென்று என்னால் கிரகிக்க முடிந்தது. பேட்டி முடியும் வரை என்னால் அங்கும் இங்கும் நகர முடியவில்லை. அந்த பேட்டியின் சாராம்சத்தை என்னால் முடிந்த வரை தருகிறேன்.

என் தந்தையார் பலத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். அவற்றில் ஒன்று பவழக்கொடி(1934). அந்தக் காலத்தில் பிரபலமான எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் அறிமுகமானப் படம். ஆனால் என் தந்தையார் சொல்லுவார், பாகவதருக்கு திறமையிருந்தது, நான் அறிமுகப்படுத்தினேன், நான் செய்யவில்லையென்றாலும் அவராகவே முன்னுக்கு வந்திருப்பார்.

மற்றொரு படமான சேவாசதனம்(1938) பற்றிக் கூறும்பொழுது, 1938ல்வெளியான இந்த படத்தின் கதை புரட்சிகரமானது. வயது முதிர்ந்த பிராமணரை மணக்கும் ஒரு பாடகி, வீட்டை விட்டு விரட்டப்பட்டு நம் சமுதாயத்தினால் விபச்சாரத்தில் தள்ளப்படுகிறாள். அதிலிருந்து மீண்டு அவள், அவளைப் போன்ற சிறுமிகளை மீட்கும் படி செல்லும் கதை.

நினைத்தாலே பிரம்மிப்பாக உள்ளது. 1938 ல் இப்படியொருக் கதையை நினைத்துப் பார்பதே மிகப் பெரிய விஷயம். அவர் திரைப்படமே எடுத்து வெளியிட்டார். அது மட்மல்ல, இந்தப் படத்தின் கதாநாயகியாக எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அறிமுகமானார்.

இதை விட நான் பிரம்மிப்பில் உறைந்தது, அவரின் மற்றொரு படமான தியாக பூமி(1939) என்றத் திரைப்படம். இந்திய திரைப்பட வரலாற்றிலேயே, திரைக்கு வந்து சில வாரங்களியலேயே, ஏன் சில நாட்களிலேயே, அவ்வளவு ஏன், திரைக்கு வரவே வராத பலத் தமிழ்ப் படங்களை நாம் தொலைக்காட்சிகளில் பண்டிகை மற்றும் வடுமுறை தினங்களை முன்னிட்டு ஒளிபரப்பப்பட்டு, நாம் 'ஙே' என்று விழித்துப் பார்த்திருக்கிறோம். ஆனால், திரையிடப்பட்டு சில வாரங்களில் அதன் தாக்கத்தை பொறுக்க முடியாமல் ஆங்கிலேய அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் தியாகபூமி. இன்று வரை இதுபோன்று எந்தப்படமும் தடை செய்யப்பட்டதில்லை. காரணம் அதன் புரட்சிகரமான சிந்தனையும் கல்கி அவர்களின் கதையும் மற்றும் வீரியமான வசனங்களும் தான்.

பிராமணக்குலத்திலிருந்து வந்த ஒரு பெண் திருமணமானதும் கணவன் குடும்பத்தில் வரதட்சணை கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வீட்டிலிருந்து விரட்டப்படுகிறாள். குழந்தையுடன் தெருவில் தள்ளப்படுகிறாள். சமூகம் அவளை பலவாறு துன்புறுத்துகிறது. தனியாகப் போராடி மீண்டு, அவள் செல்வந்தராகிராள். பணம் வந்தவுடன், விட்டுச் சென்ற கணவன் சேர்ந்து வாழ அழைக்க, அவள் மறுக்க, அவன் நீதிமன்றத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழ வழக்குத் தொடர்கிறான். அவள் மீண்டும் சேர விரும்பவில்லையென்று நீதிபதியிடம் கூறுகிறாள். பலத் துன்பங்களுக்காளாக்கப்பட்ட பொழுது வராத தன் கணவன் இப்பொழுது வந்ததன் நோக்கம் தன்னிடமிருக்கும் பணம்தான் என்கிறாள்.

 பின்னர் அவள் கூறுவதுதான் மிகவும் புரட்சிகரமானது. அவள் வினவுகிறாள்,கணவனால் கைவிடப்பட்ட மனைவியின் பாத்யதை என்ன? விவாகரத்தில் மனைவிக்குக் கணவன் கொடுப்பது என்ன?ஜீவனாம்சம் தானே. என் கணவனுடன் சேர்ந்து வாழ நான் விரும்பவில்லை. அதனால் நான் அவருக்கு ஜீவனாம்சம் அளிக்கிறேன். நான் அவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று கூறுவது அந்த காலத்திலல்ல, இன்று கூட மிகவும் புரட்சியான ஒரு முற்ப்போக்குச் சிந்தனை. வழக்கு முடிவில் நீதிபதி சட்டத்தில் அதற்கு இடமில்லையென்றும், கணவனுடன் சேர்ந்து வாழுமாறு தீர்ப்பளிக்கின்றார். மனமுடைந்த அவள், நம் இந்திய தேசச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுச் சிறைக்குச் செல்கிறாள். வரதட்சணைக் கேட்டுத் துன்புறுத்தியக் கணவனுடன் சேர்ந்து வாழ்வதைவிட சிறைச்சாலை மேல் என்று அவள் சிறை செல்வதாக முடிகிறது இத்திரைப்படம். நினைத்துப் பாருங்கள், 1939 ல் கல்கியின் சிந்தனை மற்றும் இப்படத்தைத் தயாரித்த கே.சுப்ரமணியன் அவர்களின் மனோதிடம்.

தயாரிப்பாளர் கே.சுப்ரமணியன் அவர்கள் போன்றோர் தமிழ் திரைப்பட உலகிற்கு ஆற்றியப் பணி பெரும்பான்றோர்க்குத் தெரிய வாய்ப்பில்லை. காலத்தால் மறக்கடிக்கப்பட்ட கே.சுப்ரமணியன் அவர்களுக்கும், அவரைப்போன்ற பலத் துறையினருக்கும் நம் அரசு நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவப்படுத்த முயல வேண்டும். வாழும் மேதைகளை கண்டு பெருமைப்படும் நாம், தன்னலமில்லாத பொது சேவையில் ஈடுபட்ட கே.சுப்ரமணியன் அவர்கள் போன்றோரை தெரிந்து கொள்ள மறுக்கப்பட்டுள்ளோம். இப்படிப்பட்ட அரிய பல நல்ல நிகழ்ச்சிகளை விளம்பரமில்லாமல் ஒளிபரப்பும் பொதிகைத் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. இந்த பேட்டியில் பங்கேற்ற சுப்ரமணியன் அவர்களின் மகன் திரு.கே.கிருஷ்ணஸ்வாமி (கிருஷ்ணஸ்வாமி அஸோஸியேட்ஸ்) அவர்களுக்கும் நிகழ்ச்சியை நயம்பட தொய்வில்லாமல் சுவாரசியமாக சுவையுடன் நிகழ்வுகளை விவரித்ததற்கும் மிக்க நன்றி. இது போன்று உங்கள் கவனத்தைக் ஈர்த்த மற(றை)க்கப்பட்ட இந்திய மா மேதைகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் படி தாழ்வன்புடன்பணிகிறேன்.
பார்த்த நேயர்களுக்கு நன்றியய்யா...! பார்க்காதவர்களக்கு இருக்கவே இருக்கிறது விக்கிபீடியா....!
Ps.http://en.m.wikipedia.org/wiki/K._Subramanyam

Friday, December 27, 2013

NANBARGAL (FRIENDS)

நண்பர்கள்.
மழை பெய்யுமென ஏங்கி, வானம் பொய்த்துப்போனதை எண்ணி சற்று மனம் வருந்தி, மார்கழிக்குளிரில் சுருங்கி படுத்தேன். வீட்டில் யாரும் இல்லாததால் நிசப்தம். குழந்தைகள் பள்ளி.மனைவி அலுவலகம். நான் தனிமையில். அலுவலகம் விடுமுறை. தொல்லைக்...மன்னிக்கவும்...தொலைக்காட்சியை   சற்றே பார்த்து புத்தகங்களைப் புரட்டி வெறுத்து பால்கனியில் நின்று போவோர் வருவோரை   வேடிக்கைப் பார்த்தேன்.அதிலும் ஒட்டாமல், முகநூலில் இன்று என்னவுள்ளது என்று வலைக்ககுள்நுழைந்தேன். அங்கும் மனம் இலயிக்காமல் ஒரு வெறுமை. நண்பர்கள் வீட்டிற்க்குச் செல்லலாம் என்று தீர்மானித்து சட்டையை மாட்டினால்,எந்த நண்பர் வீட்டிற்க்குச்செல்வது, அவர் வீட்டில் இருப்பாரா இந்த நண்பரின் மனைவி என்ன சொல்வாரோ என்று குழப்பம். நம்பமாட்டீர்கள்..மறுபடியும் முகநூல் சென்று யாராவது புதிதாக எதாவது கூறியிருக்கின்றனரா என்றால் ஒன்றும் புதிதில்லை. என்னவென்று யோசித்ததில், உலகத்தின் வேகத்திற்க்கு ஈடு கொடுக்க நாம் பலவற்றை இழந்தது புலனாகியது. அந்த இழப்பின் மிக முக்கியமான ஒன்று நம் அடையாளமாக விளங்கிய நம் நண்பர்கள்.
ஒரு நண்பனின் வீட்டிற்க்கு செல்ல எவ்வளவு யோசனை. ஞாயிறன்று முதலில் ஃபோன் செய்து நண்பனை வீட்டில் இருக்கச்சொல்லி,எட்டு மைல் சென்று, அவன் வீட்டிற்க்கு சென்று,அவன் மனைவி, குழந்தைள் ஊடே அவனுடன் என் மனைவி, குழந்தைள் சகிதம் பரஸ்பரம் உறையாடி வருவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி உண்டென்றாலும், பள்ளிப்பருவம், கல்லூரிக் கால நண்பர்களுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்த இன்பமே தனி.
சொல்லப்போனால், எந்த ப்ரதிபலனையும் எதிர் பாராமல் துளியும் ஓளிவு மறைவவில்லாமல் பழகிய நண்பர்கள், எந்த நேரத்தில் கூப்பிடாலும் உடனே வருவார்கள். காலத்தின் ஓட்டத்தை சற்றே பின்னோக்கி நகர்த்திப்பார்கிறேன்.
சைக்கிளில் மூச்சிரைக்க வேகமாக வந்த ஓரு நண்பன், டேய், ஸஃபயர் தியேடருக்கு உடனே போகனுடா நம்ம ஆளுங்க இந்திப்டம் மைனே ப்யார் கியா போக பிளான் பண்றாங்க, அவளுங்க மூணு பேர்,நாம மூணு பேர், எப்படியாவது டிக்கெட் வாங்கிரனும். மானப்பிரச்னைடா....
ஒரு டிக்கெட் இருபது ரூபாடா, ஆறு டிக்கெட் நூத்தியிருபது மச்சான்...நம்மக்கிட்ட பணமல்லையே... எப்படியவது போகனும்.... என்னப் பண்ணலாம்....
சரி, நாளை கட்ட வெச்சிருக்கியே பிராக்டிகல் எக்ஸாம் ஃபீஸ், அத எடு, போலாம்...
அய்யோ,எங்க அப்பா கொன்னேபுடுவாரு... பரவாயில்ல மச்சான் கட்டியாச்சுன்னு சமாளி...உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா...
ஒரு வழியாக அவனை சம்மதிக்க வைத்து, தியேட்டரில் விவரம் தெரிந்து பார்த்த முதல் இந்திப் படம். ஒன்றும் புரியவில்லை என்பது வேற விஷயம். ஆனால் ஸஃபயர் தியேட்டரும்,புரியாத இந்திப் படமும், அந்த நண்பிகளும், அந்த தியேட்டரின் டிக்கெட் கிழித்தவரின்முகமும், இருக்கைகளுக்கு அடியே ஓடிய எலிகளும் இன்றும் நினைவில் நேற்று நடந்தது போல இருக்கிறது.
காரணம்...நண்பர்கள்...
இன்னும் சற்று பின்னோக்கினால்...
மெரினா பீச்சில் கிரிக்கெட் ஆட மதியம் இரண்டு மணி கொளுத்தும் வெயிலில் துவங்கி, இருட்டிய பின்னும் விளையாடி, பந்து கண்ணுக்கேத் தெரியாமல் போகும் போது தான், எதிரணி கேப்டனிடம், ஹலோ ப்ரதர், பேட் லைட் மா... என்று தகராறு செய்து, ஒரு வழியாக தோல்வியை, ட்ரா வாக்கி, இருட்டிய பின்னும் வீட்டுக்கு சென்று படிக்காமல், திருவல்லிக்கேணி கிழக்கு குளக்கரையில் மணிக்கணக்கில், சிரிகாந்தா, ரவி ஸாஸ்திரியா யார் சிறந்த பேட்ஸ்மேன், இந்தியா, பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்ட்ரேலியா, இங்லாந்து என சீசனுக்கேற்ப சண்டையிட்டு, ஒரு மேட்ச் முடிந்ததும், திருவல்லிக்கேணி மாட வீதி முழுவதும் நண்பர்களுடன் விவாதித்து, இந்தியா வெற்றியடைந்தால் எதோ நாமே விளையாடி வெற்றி பெற்றது போல இறுமாப்புடன் நண்பர்களுடன் நடந்த நாட்கள்....
மிக அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி, அதை விவாதித்து, சதா சர்வ நேரமும் சிந்தித்ததனால்தானோ என்னவோ, இப்போது கிரிக்கெட் மீது ஒரு அலுப்பு தட்டுகிறது.
ஆனால் நண்பர்களிடமல்ல....
இன்று நம்மில் பல பேர் நம் பால்ய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், நம் இளமைக்கால நட்பின் நெருக்கத்தை உணர முடியவில்லை. சமூக, பொருளாதார காரணங்களாகக்கூட இருக்கலாம். மொத்தத்தில் தொலைந்தது நம் அடையாளங்கள்.
அதன் காரணமாகத்தான் என்னவோ, இன்று நாமனைவரும் முக நூல் வழியாக நாம் தொலைத்ததை தேடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்தபாடில்லை.... 

Friday, January 25, 2013

விஸ்வரூபம்


விஸ்வரூபம் 

தமிழ் கூறும் நல்லுலகம் "விஸ்வரூபம்" என்ற சமஸ்க்ருத  சொல், வைணவ கடவுள் 'ஸ்ரீமன் நாராயண'னின் 'மிகப்  பிரமாண்ட சொருபம்' என்பதைக் குறிக்கும் சொல்  என ஏற்றுக்  கொண்டதால், இந்தத் திரைபடத்தின் தலைப்பே இது இஸ்லாமியத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த அளவு தொடர்பு உள்ளது என்பதை தெளிவு படுத்துகிறது. எங்கோ எவரோ தவறு செய்தால் அவர்களை தங்களுடன் ஒப்பிட்டுப்  பார்த்து, இவர்களைப் போல் நாமும் மற்ற சமுதாயத்தினரால் கருதப்பட்டு விடுவோமோ என்ற ஐயத்தின் வெளிப்பாடே, இந்தக்  மதக்  குழுக்களின் பயத்திற்கு முதல் காரணம்.

பல படங்களில் அரசியல் தலைவர்கள் முதல்,  காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஏன் மாநிலத்தின் முதல்வர் முதல் ஆளுநர் வரை, தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவர்களெல்லாம் போர்க்கொடித்  தூக்கினால், நம் நாட்டில் ஏன்  உலகத்திலேயே, திரைப்படங்கள்  எடுக்க முடியாது. 

இந்தத்  திரைபடத்தில் வரும் காட்சிகள் நியூயார்க் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களை மைய இடமாகக் கொண்டு இயங்கும் அல் - கொய்தா  போன்ற தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் எப்படி இந்தியாவில் ஊடுருவி தமிழ்நாடு வரை பரவியுள்ளது அது எவ்வாறு முறியடிக்கபடுகிறது என்பதை கதையாக புனைந்து, சர்வதேசத் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவைக் கொண்டு எடுக்கப்படும் படத்தில் ஒரு இந்து தீவிரவாதியோ, கிறிஸ்துவ தீவிரவாதியோ இடம் பெற முடியாது.  அப்படி படத்தின்  கதையை அமைத்தால், அதை அல் - கொய்தா தீவிரவாதிகளே ஏற்கமாட்டார்கள்.

எவ்வளவோ மிக நல்லக்  கருத்துள்ள படங்கள் இது நாள் வரை நம் நாட்டில் வந்துள்ளது.  உதாரணத்திற்கு,
1.இந்தியன்   -  லஞ்சத்தின் அவலத்தை கூறும் மிக முக்கியத்  திரைப்படம் 
2.முதல்வன்  - ஒரு மாநிலத்தின் முதல்வர் எவ்வாறு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனக்  கூறும் படம் 
3.அந்நியன்  - மற்றும் ஒரு லஞ்சத்தின் சின்னமாக விளங்கும் நம் அனைவரைப் பற்றி தெளிவாகக்  கூறும் படம். மற்றும், 
ஆரக்ஷன், ரமணா , போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் வந்து, சென்று விட்டன.  இத்துணைத் திரைப்படங்களைப்  பார்த்த நாம் என்ன அதற்க்கெல்லாம் அசைந்தோமா? திருந்தினோமா ?
அல்லது 
மனம் மாறி லஞ்சம் கொடுக்காமலும் வாங்காமலும், உள்ளோமா?
அல்லது 
இந்திய செல்வங்களை அந்நிய நாடுகளுக்கு விற்காமல் உள்ளோமா ?
அல்லது 
இந்திய பணத்தின் டாலருக்கு நிகரான வலிமையை வீழ்த்தும் "ஹவாலா " பரிமாற்றம்  செய்யாமல் உள்ளோமா?
அல்லது 
இந்திய சரக்குகள் இங்கு தேங்கி நிற்க, அந்நிய நாடுகளின் குண்டூசி முதல் எலெக்ட்ரானிக் பொருட்கள்  வரை  கள்ள மார்கெட்டில், சுங்கத் துறைக்கு லஞ்சம் கொடுத்து, விற்காமல்/வாங்காமல்  உள்ளோமா ?
அல்லது 
திரைப்படம் வெளிவந்த மறு நாளே திருட்டு DVD/CD களை விற்காமல்/பார்க்காமல்  உள்ளோமா ?
அல்லது
ஆட்சியை கைப்பற்ற, சிறுபான்மையினரின் வோட்டுகளை பெற, மத/ஜாதிக்  கலவரங்களைத் தூண்டிவிட்டு  குண்டுகளை வெடிக்கவிட்டு, வேடிக்கைப் பார்க்காமல் உள்ளோமா ?
அல்லது 
மும்பை டெல்லி ஹைதராபாத் கோயமுத்தூர் என நம் நாட்டின் ஏறக்குறைய அனைத்துப்பகுதிகளிலும் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுக்காமல் தான்  உள்ளோமா?

இவ்வாறெல்லாம் மிக நல்லப்  பண்புகளை கற்காத நாம், இந்தத்திரைபடத்தைப்  பார்த்து  சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று கூறுவது, இந்த சில மதக்  குழுக்களின் தலைவர்களின் அதீதக்  கற்பனையின் "விஸ்வரூபம்" 

Wednesday, January 25, 2012

“புரியாத புதிராக உள்ள டெல்லி”

அன்புள்ள அருணா,
டெல்லி யை பற்றிய உனது கட்டுரை மிகவும் அருமை. உன்னுடைய நினைவுகளை அழகாக செதுக்கியிருக்கிறாய். உன் நண்பர்(பி)கள், ஆபீஸ், வீடு, என பல அழகிய பக்கங்கள் கொண்ட டெல்லி வாழ்க்கை மிக நன்றாக உள்ளது. பல கனவுகளுடன் டெல்லி வரும் ஒவ்வொரு இந்தியனும் காணும் மெல்லிய ரசனையை,மிக நேர்த்தியாக பிரதிபலித்துள்ளது உன் கட்டுரை. வாழ்த்துக்கள். உன் கருத்துக்களை மறுப்பதாக நினைக்க வேண்டாம். என் பார்வையிலும் டெல்லி மிக அழகான நகரம்.வாழும் மக்களும் இனிமையானவர்கள். அவரவர் அனுபவங்களே, அவர்களது வாழ்க்கை. என்னுடைய டெல்லி அனுபவம் மிக நல்ல விதமாக இருந்தாலும், நான் கவனித்த அல்லது கவனிக்கப்பட்ட, என்னைக்கவர்ந்த, ஈர்த்த, பாதித்த டெல்லி அனுபவங்களை (சற்று நீளமாக) தவறாக நினைக்க மாட்டாய் என எண்ணி எழுதுகிறேன்.
“புரியாத புதிராக உள்ள டெல்லி”
காலை ஆறு மணிக்கு எழுந்து,ஏழுக்கு ரெடியாகி, ஏழரைக்கு மாமி மெஸ்ஸில் வீட்டு இட்லி-ஐ விழுங்கி(கல் தோசை கேள்விப்பட்டிருப்பீர்கள் …கல் இட்லி..?). பிறகு சத் நகரில் இறங்கி பூசா ரோட், அஜ்மல்கான் ரோட், அர்யசமாஜ் ரோட் என சுமார் பதினைந்து நிமிடம் நடந்து ஏர் இந்தியா பஸ்-ஐ அரக்க பறக்கப்பிடித்து ஐ.ஜி.ஐ. ஏர்போர்ட் சென்று வேலை பார்த்து, பிறகு மாலை அதேப்போல் நடந்தது வந்து சத் நகரில் உள்ள ஒன் ரூம் செட்-ல் நங்கள் ஐவர் (எல்லோரும் பேட்சிலர்ஸ்) எங்களுக்கு தெரிந்த சமையல் கைவண்ணத்தை மற்றவருக்கு காண்பித்து இரவு கேபிள் டிவி பார்த்து மொட்டை மாடி தண்ணீர் தொட்டி மேல் படுத்து (வெயில் காலத்து ஏ.சி ரூம்), பல நாட்கள் ஒவ்வொரு மெஸ்ஸாக சாப்பாட்டிற்கு நாயாய் அலைந்து, இரவில் பல வேளை தெருவோர டாபா வில் காய்ந்த ரொட்டிகளை சப்ஜி வைத்து உள்ளுக்குள் திணித்து, சவுத் இந்தியன் சாப்பாடுக்காக ஏங்கிய நாட்கள் பல.(அப்பொழுது தான் புரிந்தது, நம் ஆட்கள்ளுக்கு நாக்கு மிகவும் நீளம் என்பதன் அர்த்தம்). கிடைத்த சொற்ப சம்பளத்தில் என் செலவுகள் போக வீட்டிற்கு மிக சொற்ப பணம் அனுப்பியதில் எங்கள் அப்பாவும் அம்மாவும் மகிழ்ந்து போவர்.
இப்படி ஒரு பேட்சிலராக பல கஷ்டங்கள் அனுபவித்து வாழ்க்கையின் பல பாடங்களை நான் கற்றுக்கொண்டது நமது தலை நகர் டெல்லியில் தான். தாங்க முடியாத வெயில்,உறைய வைக்கும் குளிர் என தட்ப வெப்பமும் தன் கடமையில் சற்றும் தளராது தன் பணியினை செய்து வாட்டி வதைக்கும். மெட்ராஸில் இருக்கும் வரை தமிழைப்பற்றி கவலை படாமல் இருக்கும் நாம் அனைவருக்கும், வெளிநாடு, வெளிமாநிலம் வந்தவுடன் அதிகரிக்கும் தமிழ் பற்று, எனக்கும் தொற்றிக்கொண்டு தீவிர தமிழ் ரசிகனாகி தமிழ் புத்தகங்கள்( குமுதம்,கல்கி, ஆனந்தவிகடன், கல்கண்டு) படித்து, ஒவ்வொரு ஞாயிறும் தவறாமல் தமிழ் திரைப்படம்( வாழ்க டெல்லி தமிழ் சங்கம்.!) பார்த்து, நானும் ஒரு (மர…!)தமிழன் என நிரூபித்து, “சாலா மதராசி” என சர்வ சாதரணமாக டெல்லி வாழ் பஞ்சாபி,குஜராத்தி,இன்னும் பல சேட் கம்னாட்டி-களின் பேச்சை கேட்டுக்கொண்டு பதில் சொல்லத்தெரியாமல்(முடியாமல்) வாழ்ந்த, இன்னமும் வாழும் பச்சை தமிழர்களில், “உங்களைபோல் நானும் ஒருவன்”.
இப்படி பல இன்னல்களை டெல்லி எனக்கு தந்தாலும், டார்வின்-ன் தத்துவமான “சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்” என்ன என்பதை டெல்லி தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. ஏழை மக்களின் அவலங்களை பிரதிபலிக்கும் பழைய டெல்லி, சிறு பைப்புகளில் தங்கள் வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்கள், நடுங்கும் குளிரில் கிழிந்த சட்டையணிந்து சைக்கிள் ரிக் ஷா இழுக்கும் நோஞ்சான் சர்தார்ஜிகள் பார்க்க வேண்டுமா..? பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷன் வாருங்கள்…ஏழ்மை என்றால் என்ன என்று முகத்தில் அறையும் காட்சி உங்களை அன்புடன் வரவேற்கும். அதே சமயம் நியூ டெல்லி பணக்காரர்களுக்கே சொந்தம்…பாலிகா பஜார் போன்ற எண்ணற்ற ஷாப்பிங் மால்-களும், ஸ்டார் ஹோட்டல்களும், ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ண கட்டிடங்களும்,மெட்ரோ ட்ரெயின்,லம்போர்கினி, பெராரி,பென்ஸ் என சொகுசு கார்களின் அணிவகுப்புளும், இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் தோல்வியை உலகிற்கு பறை சாற்றும்.
குளிர் காலத்தில் அழகிய பூத்துக்குலுங்கும் மரங்கள், சுவையுள்ள அரிய பழங்கள், நாவிர்க்கினிய பல வகையான பால் ஸ்வீட்கள் ரசிக்க வைக்கும் இளவேனிற்காலம்,அழகிய சாலைகள், உயர்ந்த கட்டிடங்கள், திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்று எல்லோருக்கும் இனிய டெல்லி வாழ்க்கை எனக்கு ஏனோ பல விடையில்லா கேள்விகளாக மனதில் நிற்கிறது.
பஞ்சாபி, குஜராத்தி,பிஹாரி,ஜாட்,தமிழன்,தெலுங்கன், மலையாளி,கன்னடிகா, பெங்காலி என எல்லோரும் கலந்து வாழும் டெல்லி யில் யார் இந்தியர்..?
டெல்லி யில் நம் கண்ணெதிரிலே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு யார் காரணம்…?
டெல்லி பழைய ரயில் நிலையத்தில் பிச்சை கேட்கும் அந்த பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்…?
டெல்லி பார்லிமென்ட் கொடியவர்களின் கூடாரமானது ஏன்…?
காமன்வெல்த் கேம்ஸ் நடத்திய கள்(ல்)மாடி, டூ ஜி- ராஜா போன்ற லட்சக்கணக்கான பண முதலைகள் உருவாகக்காரணமான நம் அழகிய தலை நகரம் டெல்லி எனக்கு “புரியாத புதிராக”வே இன்னமும் உள்ளது