Sunday, April 24, 2011

அம்மா...

அம்மா...
என் தமக்கையின் வலைத்தளத்தில்,எங்கள் தாயின் மறைவைப்பற்றி, அவர் எழுதிய  மின் அஞ்சலுக்கு, நான் எழுதிய கடிதம் (அவரை தேற்றவும், என்னை நானே தேற்றிக்கொள்ளவும்..)



மிகவும் நன்று. மிகையில்லை… அருணா.,


எண்ணங்களின் ஆழம் மிக மிக அதிகம். உள்ளது உள்ள படி கூறுவது மிக கடினம். இந்தப் பதிவில் நம் அம்மாவைப் பற்றி, உன்னுடைய எண்ணங்களை கவிதை நயத்துடன், நம் ஆற்றாமையை நீ விவரித்தது புரிந்தும், நீ கேட்ட கேள்வி புரிந்தும்,என்னால் அந்த கேள்விக்கு விடை காண முடியவில்லை. முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியம் முழுமையடைவதில்லை என்று பல சமாதானங்கள் நாம் கூறிக்கொண்டாலும், சில பல முறண்பாடுகள் நிறைந்த நம் அனைவர் வாழ்க்கை, இன்பம்,துன்பம், சுகம் துக்கம், என மாறி மாறி வருவது என நம் மனதை நாமே தேற்றிக்கொண்டாலும், நாம் மிகவும் நேசித்த அம்மா, நம்மை விட்டு சென்று விட்டார் என்று என்னால் இந்த நிமிடம் வரை நம்ப இயலவில்லை. காலச்சக்கரம் ஒன்றே நம் அனைவருக்கும் மருந்தாகும்





கடவுளிடம் பக்தியை கற்றோம்..!,குருவிடம் வித்தையை கற்றோம்..!,தந்தையிடம் நேர்மை,வாழ்க்கை நெறிமுறை கற்றோம்..!, ஆனால் தாயிடம் மட்டும் எதையும் கற்கவில்லை…., பாசத்தை உணர்ந்தோம்…!ஆம்..உலகில் நாம் அனைவரும் பிறந்த நாள் முதல், தாயின் கடைசி நாள் வரை, பாசத்தை அனுபவிக்கிறோம்…!


அம்மா…


இந்த ஒரு சொல், நாம் எல்லாருடைய வாழ்க்கையிலும் சர்வ சாதாரணமாக அறியப்பட்ட ஒரு வார்த்தை. மதம்,மொழி,இனம்,நிறம்,கண்டம் என அனைத்தையும் கடந்து, உலகில் உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு சொல். இதன் மகத்துவத் தத்துவதிலேயே இந்த உலகம் இயங்குகிறது. கடவுளைத் தேடித்தேடி மனிதன், கடைசியில் தன் தாயிடம், கடவுளைக் காண்கிறான். இருக்கும் பொழுது இதை அறியாத மனம், இழந்த பொழுது அழுது துடிக்கிறது….!





எங்கள் அம்மா…அனைத்து உயிர்களிடமும் அன்பு கொண்டவர். எங்கள் ஐவரையும்(எங்கள் தந்தையையும் சேர்த்து)கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டவர். சிறு வயது முதல், நான் வசிகரிக்கப்பட்ட ஒரே முகம், அது என் தாயின் முகம்.அந்த ஒரு காரணமாகவே, என் மனைவின் முகத்தில், என் தாயின் சாயல் தெரிந்தால்,உடனே என்னால் அங்கீகரிக்கப்பட்டு, என் மனைவியானாள்.



எல்லா பிள்ளைகளும்,தன் தாயைப்போற்றுவது இயற்கை. ஆனால், எல்லாக் கணவர்களும், தன் மனைவியைப் போற்றுவதில்லை.(விதி விலக்குகள் உண்டு).கணவன், மனைவிக்குள்ளே சண்டைகள் வருவது வழக்கமான ஒன்று. ஆனால் எங்கள் அம்மாவும்,அப்பாவும் சண்டைப்போட்டு நாங்கள் பார்த்ததே கிடையாது. காரணம், அப்பா எவ்வளவு கோபமாக பேசினாலும், அம்மா தன் அப்பாவித்தனத்தால் பதில் பேசாமலேயே மெளனமாக வென்றுவிடுவாள், அம்மாவின் மெளனத்திலும் ஒரு அர்த்தம்…!, சோகத்திலும் ஒரு அழகு…!சிரிப்பிலோ…இறைவன்…!

இப்படி அம்மாவின் பல பிம்பங்கள் என் மனத்தில் நீங்காமல் நிலைக்கொண்டுள்ளதாலோ என்னவோ..நம் அம்மா, நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்று என்னால் நினைக்கமுடியவில்லை. அம்மா நம் அனைவரின் மனதிலும் வாழ்ந்து நம்மை நல்வழி நடத்துவார்….




ப்ரியமுடன்




பாலாஜி.





0 comments:

Post a Comment