Wednesday, January 25, 2012

“புரியாத புதிராக உள்ள டெல்லி”

அன்புள்ள அருணா,
டெல்லி யை பற்றிய உனது கட்டுரை மிகவும் அருமை. உன்னுடைய நினைவுகளை அழகாக செதுக்கியிருக்கிறாய். உன் நண்பர்(பி)கள், ஆபீஸ், வீடு, என பல அழகிய பக்கங்கள் கொண்ட டெல்லி வாழ்க்கை மிக நன்றாக உள்ளது. பல கனவுகளுடன் டெல்லி வரும் ஒவ்வொரு இந்தியனும் காணும் மெல்லிய ரசனையை,மிக நேர்த்தியாக பிரதிபலித்துள்ளது உன் கட்டுரை. வாழ்த்துக்கள். உன் கருத்துக்களை மறுப்பதாக நினைக்க வேண்டாம். என் பார்வையிலும் டெல்லி மிக அழகான நகரம்.வாழும் மக்களும் இனிமையானவர்கள். அவரவர் அனுபவங்களே, அவர்களது வாழ்க்கை. என்னுடைய டெல்லி அனுபவம் மிக நல்ல விதமாக இருந்தாலும், நான் கவனித்த அல்லது கவனிக்கப்பட்ட, என்னைக்கவர்ந்த, ஈர்த்த, பாதித்த டெல்லி அனுபவங்களை (சற்று நீளமாக) தவறாக நினைக்க மாட்டாய் என எண்ணி எழுதுகிறேன்.
“புரியாத புதிராக உள்ள டெல்லி”
காலை ஆறு மணிக்கு எழுந்து,ஏழுக்கு ரெடியாகி, ஏழரைக்கு மாமி மெஸ்ஸில் வீட்டு இட்லி-ஐ விழுங்கி(கல் தோசை கேள்விப்பட்டிருப்பீர்கள் …கல் இட்லி..?). பிறகு சத் நகரில் இறங்கி பூசா ரோட், அஜ்மல்கான் ரோட், அர்யசமாஜ் ரோட் என சுமார் பதினைந்து நிமிடம் நடந்து ஏர் இந்தியா பஸ்-ஐ அரக்க பறக்கப்பிடித்து ஐ.ஜி.ஐ. ஏர்போர்ட் சென்று வேலை பார்த்து, பிறகு மாலை அதேப்போல் நடந்தது வந்து சத் நகரில் உள்ள ஒன் ரூம் செட்-ல் நங்கள் ஐவர் (எல்லோரும் பேட்சிலர்ஸ்) எங்களுக்கு தெரிந்த சமையல் கைவண்ணத்தை மற்றவருக்கு காண்பித்து இரவு கேபிள் டிவி பார்த்து மொட்டை மாடி தண்ணீர் தொட்டி மேல் படுத்து (வெயில் காலத்து ஏ.சி ரூம்), பல நாட்கள் ஒவ்வொரு மெஸ்ஸாக சாப்பாட்டிற்கு நாயாய் அலைந்து, இரவில் பல வேளை தெருவோர டாபா வில் காய்ந்த ரொட்டிகளை சப்ஜி வைத்து உள்ளுக்குள் திணித்து, சவுத் இந்தியன் சாப்பாடுக்காக ஏங்கிய நாட்கள் பல.(அப்பொழுது தான் புரிந்தது, நம் ஆட்கள்ளுக்கு நாக்கு மிகவும் நீளம் என்பதன் அர்த்தம்). கிடைத்த சொற்ப சம்பளத்தில் என் செலவுகள் போக வீட்டிற்கு மிக சொற்ப பணம் அனுப்பியதில் எங்கள் அப்பாவும் அம்மாவும் மகிழ்ந்து போவர்.
இப்படி ஒரு பேட்சிலராக பல கஷ்டங்கள் அனுபவித்து வாழ்க்கையின் பல பாடங்களை நான் கற்றுக்கொண்டது நமது தலை நகர் டெல்லியில் தான். தாங்க முடியாத வெயில்,உறைய வைக்கும் குளிர் என தட்ப வெப்பமும் தன் கடமையில் சற்றும் தளராது தன் பணியினை செய்து வாட்டி வதைக்கும். மெட்ராஸில் இருக்கும் வரை தமிழைப்பற்றி கவலை படாமல் இருக்கும் நாம் அனைவருக்கும், வெளிநாடு, வெளிமாநிலம் வந்தவுடன் அதிகரிக்கும் தமிழ் பற்று, எனக்கும் தொற்றிக்கொண்டு தீவிர தமிழ் ரசிகனாகி தமிழ் புத்தகங்கள்( குமுதம்,கல்கி, ஆனந்தவிகடன், கல்கண்டு) படித்து, ஒவ்வொரு ஞாயிறும் தவறாமல் தமிழ் திரைப்படம்( வாழ்க டெல்லி தமிழ் சங்கம்.!) பார்த்து, நானும் ஒரு (மர…!)தமிழன் என நிரூபித்து, “சாலா மதராசி” என சர்வ சாதரணமாக டெல்லி வாழ் பஞ்சாபி,குஜராத்தி,இன்னும் பல சேட் கம்னாட்டி-களின் பேச்சை கேட்டுக்கொண்டு பதில் சொல்லத்தெரியாமல்(முடியாமல்) வாழ்ந்த, இன்னமும் வாழும் பச்சை தமிழர்களில், “உங்களைபோல் நானும் ஒருவன்”.
இப்படி பல இன்னல்களை டெல்லி எனக்கு தந்தாலும், டார்வின்-ன் தத்துவமான “சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்” என்ன என்பதை டெல்லி தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. ஏழை மக்களின் அவலங்களை பிரதிபலிக்கும் பழைய டெல்லி, சிறு பைப்புகளில் தங்கள் வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்கள், நடுங்கும் குளிரில் கிழிந்த சட்டையணிந்து சைக்கிள் ரிக் ஷா இழுக்கும் நோஞ்சான் சர்தார்ஜிகள் பார்க்க வேண்டுமா..? பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷன் வாருங்கள்…ஏழ்மை என்றால் என்ன என்று முகத்தில் அறையும் காட்சி உங்களை அன்புடன் வரவேற்கும். அதே சமயம் நியூ டெல்லி பணக்காரர்களுக்கே சொந்தம்…பாலிகா பஜார் போன்ற எண்ணற்ற ஷாப்பிங் மால்-களும், ஸ்டார் ஹோட்டல்களும், ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ண கட்டிடங்களும்,மெட்ரோ ட்ரெயின்,லம்போர்கினி, பெராரி,பென்ஸ் என சொகுசு கார்களின் அணிவகுப்புளும், இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் தோல்வியை உலகிற்கு பறை சாற்றும்.
குளிர் காலத்தில் அழகிய பூத்துக்குலுங்கும் மரங்கள், சுவையுள்ள அரிய பழங்கள், நாவிர்க்கினிய பல வகையான பால் ஸ்வீட்கள் ரசிக்க வைக்கும் இளவேனிற்காலம்,அழகிய சாலைகள், உயர்ந்த கட்டிடங்கள், திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்று எல்லோருக்கும் இனிய டெல்லி வாழ்க்கை எனக்கு ஏனோ பல விடையில்லா கேள்விகளாக மனதில் நிற்கிறது.
பஞ்சாபி, குஜராத்தி,பிஹாரி,ஜாட்,தமிழன்,தெலுங்கன், மலையாளி,கன்னடிகா, பெங்காலி என எல்லோரும் கலந்து வாழும் டெல்லி யில் யார் இந்தியர்..?
டெல்லி யில் நம் கண்ணெதிரிலே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு யார் காரணம்…?
டெல்லி பழைய ரயில் நிலையத்தில் பிச்சை கேட்கும் அந்த பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்…?
டெல்லி பார்லிமென்ட் கொடியவர்களின் கூடாரமானது ஏன்…?
காமன்வெல்த் கேம்ஸ் நடத்திய கள்(ல்)மாடி, டூ ஜி- ராஜா போன்ற லட்சக்கணக்கான பண முதலைகள் உருவாகக்காரணமான நம் அழகிய தலை நகரம் டெல்லி எனக்கு “புரியாத புதிராக”வே இன்னமும் உள்ளது

0 comments:

Post a Comment